
விழுப்புரம்
“சம வேலைக்கு சம ஊதியம் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ-வினர் விழுப்புரத்தில் பெருந்திரள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியூ-வினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியூ) மாவட்டத் துணைத் தலைவர் எம்.புருஷோத்தமன் தலைமைத் தாங்கினார்.
மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன், பொருளாளர் கே.அம்பிகாபதி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலர் ஆர்.மூர்த்தி, தலைவர் டி.ராமதாஸ், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தைக் குறைக்கக் கூடாது.
விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும்,
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அங்கன்வாடி, டாஸ்மாக், கூட்டுறவு, உள்ளாட்சி போன்ற துறைகளில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம், மதிப்பூதியத் திட்டங்களைக் கைவிட்டு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் நீண்ட காலமாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
வாகனப் பதிவு, புதுப்பித்தல், காப்பீடு, பிரிமியத்துக்கான கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிஐடியூ தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.