
எம்ஏ வரலாறு படித்துவிட்டு, பொதுமக்களுக்கு எம்பிபிஎஸ் மருத்துவம் பார்த்த போலி டாக்டரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 36வது போலி டாக்டர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா உள்பட பல்வேறு மர்மக் காய்ச்சலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சலால் 100க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற திடீர் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்த சுகாதார துறை, சம்பவ இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியது. அப்போது, காய்ச்சல் ஏற்பட்டவுடன், அதே பகுதியில் உள்ள மருத்துவரிடம் பொதுமக்கள் சிகிச்சை பெற்றதும், அங்கு குணமாகாததால், அரசு மருத்துவமனையை நாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், ஒவ்வொரு பகுதியில் உள்ள மருத்துவமனைகளை கண்காணித்து, தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழகம் முழுவதும் 100க்கு மேற்பட்ட போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 35 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள கிளினிக் மற்றும் மருத்துவமனைகளை கண்காணித்து வந்தனர். இதில், திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையொட்டி இன்று காலை சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, அற்புதராஜ் (45) என்பவர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் எம்ஏ (வரலாறு) படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார், போலி டாக்டர் அற்புதராஜை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த ஏராளமான ஊசி, மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 36வது போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலி டாக்டர்களை கைது செய்யும் பணியில் சுகாதார துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.