
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் மர்மமாக இறந்த தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் தீவிர ரஜினி ரசிகராக இருந்துள்ளார்.
முத்துகிருஷ்ணன் டெல்லி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் படிக்கும் முன், ஐதராபாத் பல்கலையில் எம்.ஏ. வரலாறு படித்துள்ளார். அங்கு படிக்கும் போது சிறந்த மாணவராக மட்டும் இல்லாமல், சினிமா, இலக்கியம், சமூக பிரச்சினைகள் மீது மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். கிருஷ்ணனின் நண்பர் வெங்கடேஷ் கூறுகையில், “ முத்துகிருஷ்ணன் தீவிர ரஜினி ரசிகராக இருந்தார். அவர் தன்னை ரஜினியாக உருவகம் செய்து கொண்டு பேசுவார், நடிப்பார்.விடுதி அறை முழுவதும் ரஜினி காந்தின் புகைப்படங்களை ஒட்டிவைத்து இருந்தார். ரஜினி காந்த் மீது இருந்த அளப்பரிய பிரியம் காரணமாக தனது பெயரைக் கூட பேஸ்புக்கில் ‘ரஜினி கிரிஷ்’ என மாற்றிக்கொண்டார்'' எனத் தெரிவித்துள்ளார்.
முத்துக் கிருஷ்ணனின் கடைசி
தமிழகத்தின் தலித் ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணன் இறப்பதற்கு முன், டெல்லி ஜவஹர்லால் பல்கலையின் நிர்வாகக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அதிலும் சமீபத்தில் பல்கலையின் நிர்வாகப் பகுதியில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. அது குறித்து கிருஷ்ணன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மார்ச் 1-ந்தேதி அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், “ எம்.பில், டாக்டர் படிப்புக்கான அனுமதியில் எந்த சமத்துவமும் இல்லை. வாய்மொழி தேர்விலும்(வைவ் வா வாய்ஸ்) எந்தவிதமான சமத்துவம் இல்லை. பேராசிரியர் சுகாதியோ தோரட் பரிந்துரைகள் மறுக்கப்படுகின்றன. நிர்வாக பகுதியில் மாணவர்கள் போராட்டம் செய்ய தடுக்கப்படுகிறார்கள், தாழ்த்தப்பட்ட, விழிப்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது, அனைத்தும் மறுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோகித் வெமுலாவின் முதலாம்ஆண்டு நினைவு தினத்துக்கு வந்தபின், ஐதராபாத் பல்கலையில் மாணவர்களிடம் காட்டப்படும் வேறுபாடு குறித்து முத்துக்கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், “நாட்டில் உள்ள முக்கியமான 10 பல்கலைக்கழகங்களில் கடுமையான சாதி வேறுபாடு காட்டப்படுகிறது என்று கடும் வேதனை தெரிவித்து அதில் எழுதியுள்ளார். பல்கலை விடுதிகளில் ஆய்வு பாடங்கள் படிக்கும் தலித் மாணவர்களுக்கு தங்குமிடங்கள் மறுக்கப்படுகின்றன என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த இயற்கைக்கு மாறான கல்வி நிறுவனங்கள், சாதி வேறுபாடுகள் ஒருநாள் மறையும், மாணவர்கள் ஒற்றுமை மூலம் ஒருநாள் அனைத்தும் முடிவுக்கு வரும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.