கர்நாடகாவுக்காக காவிரி நீர் உரிமையை விட்டுக்கொடுத்த திமுக அரசு..! மன்னிக்கவே முடியாது..! இபிஎஸ் ஆவேசம்!

Published : Nov 13, 2025, 03:45 PM IST
EPS vs MK Stalin

சுருக்கம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவுக்காக காவிரி நீர் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு ஒப்புதல் வழங்கக்கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடகாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த உச்சநீதிமன்றம்

மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு வாதங்களை முன்வைத்த நிலையிலும் மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவுக்காக காவிரி நீர் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியும், வேதனையும்

இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும்

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமல், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாய்மூடி மெளனமாக இருந்த திமுக அரசு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.

மன்னிக்க முடியாத குற்றம்

அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகாவில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!
உடைகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி.? தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே பஞ்சாயத்து