அன்பும் அமைதியும் நிலவட்டும்- இபிஎஸ், ஆணவத்தை அடக்கி தர்மத்தை காக்கனும்- ஓபிஎஸ்,- ஓணம் பண்டிகை வாழ்த்து

By Ajmal KhanFirst Published Sep 7, 2022, 11:51 AM IST
Highlights

கேரள மக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓணம் வாழ்த்து -இபிஎஸ்

அதிமுக இடைக்கால பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை, வசந்த கால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து மூன்றடி மண் தானமாகக் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவு அளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு..! சிக்கலில் ஓபிஎஸ்... காரணம் என்ன..?

அன்பும் அமைதியும் நிலவட்டும்

பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றியும்; புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும்; மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று, நம் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் மனதார வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருமண வீட்டார் உஷார்...! வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்ட மதுரை மல்லி விலை...!

ஓணம் பண்டிகை- ஓபிஎஸ் வாழ்த்து

ஓணம் பண்டிக்கையையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும்; அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று வெகு விமரிசையாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது “ஓணம்" திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாபலி சக்கரவர்த்தியின் ஆனாவத்தை அழித்திட 'வாமன அவதாரம்' தரித்த திருமால், தனக்கு மூன்று அடி மண் வேண்டும் என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டு, ஓர் அடியை வானத்திலும்; இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து அடக்கியதோடு, அந்த மன்னனின் வேண்டுதலின்படி, ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளில் அவர், தம் நாட்டு மக்களை வந்து காணும்படியாக அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக மலையாள மொழி பேசும் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆணவத்தை அடக்குவது, தர்மத்தை காப்பது

 'பிறர் வாழ நாம் வாழ்வது', 'ஆணவத்தை அடக்குவது', 'தர்மம் காப்பது', 'பக்தியே முக்தி என்பதை உணர்த்துவது” ஆகியவைதான் ஓணம் திருநாள் நமக்கு உணர்த்தும் அறிவுரைகளாகும். திருவோணப் பண்டிகையின் போது, பத்து நாட்களுக்கு மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் கோலமிட்டு, வண்ணப் பூக்களால் அலங்கரித்து, அதன் நடுவே குத்துவிளக்கேற்றி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வதோடு, உள்ளம் கவரும் நடனங்களை அரங்கேற்றியும் இன்புறுவார்கள். திருவோணத் திருநாளான இந்நன்னாளில், ஆணவம் அகன்று; பசி, பிணி, பகை நீங்கி; அன்பு அமைதி, சகோதரத்துவம் பெருகி; மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்ற என் விருப்பத்தினைத் தெரிவித்து, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த "ஓணம்" திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற இபிஎஸ்.! முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்.. தொண்டர்களுக்கு அழைப்பு

 

click me!