திருவண்ணாமலையில் போதை ஊசி மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு போதைப்பொருளை ஒழிக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Tiruvannamalai drug murder : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கொலையாளிகளை அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குற்றவாளிகள் அச்சத்தில் உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
செங்கல்பட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி! நடந்தது என்ன?
தொடரும் கொலைகள்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.
போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.
கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும். இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.