தலித் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கும் அமலாக்கத்துறை!

By Manikanda Prabu  |  First Published Jan 4, 2024, 10:23 AM IST

தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிரான வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் 70 வயதுடைய கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்களை அமலாக்கத்துறை எதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியாதபட்சத்தில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள கவரில் முகவரி எதுவும் இல்லாமல் அவர்களது பெயர்களுக்கு கீழ் இந்து பள்ளர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், தங்களது வழக்கறிஞர்களுடன் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆஜராகியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவர் மட்டும் வழக்கறிஞர்கள் இல்லாமல் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்தும் பலனில்லை. விவசாயிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தரக்குறைவாக  பேசியதாக தெரிகிறது. தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் தாங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து இருவரும் புகார் அளித்து விட்டு திரும்பியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தில் கண்ணையனும், கிருஷ்ணனும் 6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். தங்களது விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் குணசேகர் மீது அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், குணசேகரன் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீரா மாஞ்சியின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்கள் அனுப்பிய பிரதமர் மோடி!

இது தொடர்பாக புதிய புகார் ஒன்றையும் விவசாயிகள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், சேலம் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை தொடங்கியதற்கான காரணமான வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ளதாலும், விவசாயிகளை துன்புறுத்தும் எண்ணம் அமலாக்கத்துறைக்கு இல்லை என்பதால் வழக்கு முடித்து வைக்கப்படவுள்ளதாக இதுகுறித்த விவரம் அறிந்த வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஆத்தூர் விவசாயிகளான கண்ணைய்யன்,கிருஷ்ணன் ஆகியோர் மீது Wild Life Act is a Scheduled Offence கீழ் காட்டெருமைகளை வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட  WLOR-1/2017 வழக்கின் கீழ்தான் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் இருவரும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். எனவே, விடுதலை செய்யப்பட்ட ஒரு வழக்கை விசாரணைக்காக அமலாக்கத்துறை எடுத்துக் கொண்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!