
எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை : நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் துணை இயக்கம் தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இந்த இயக்கத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்தது. மேலும் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பண மோசடி பிரிவுகளின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது வழக்குகள் பதிவு செய்து அந்த இயக்கத்தின் முன்னனி தலைவர்களை கைது செய்திருந்தது.
இந்த நிலையில் எஸ்டிபிஐ அரசியல் கட்சியானது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆதரவு உள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை மண்ணடி இப்ராஹிம் தெருவில் உள்ள SDPI கட்சி அலுவலகத்திற்குள் 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது 10 க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணமோசடி வழக்கில் மொய்தீன் ஃபைஸியை கைது செய்த அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை சோதனைக்கு காரணம் என்ன.?
திடீரென அமலாக்கத்துறை சோதனைக்கு முக்கிய காரணமாக எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் மொய்தீன் ஃபைஸியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திய நிலையில்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி விமான நிலையத்தில் வைத்து ஃபைஸியை அமலாக்கத்துறை கைது செய்தது. தடை செய்யப்பட்ட பிஎப்ஐ தலைவர் அப்துல் ரசாக், எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைசிக்கு 2லட்சம் ரூபாயை பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தான் பைசி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.