
போராட்டம் கைவிடுவது குறித்து விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து இன்றைக்குள் முடிவு வெளியிடப்படும் என தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.
37 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தொடரலாமா வேண்டாமா என தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு விவசாயிகளிடம் கருத்து கேட்டு வந்தார்.
அதைதொடர்ந்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பேசிய அய்யாக்கண்ணு போராட்டம் கைவிடுவது குறித்து விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து இன்றைக்குள் முடிவு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.