
கடலூர்
உள்ளூர் தொழிற்சாலைகளில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைகேட்பு கூட்டம் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
இதற்கு ஆட்சியர் தண்டபாணி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், "மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பினை பெற மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை துறையின் மூலம் மானியத்துடன் விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் மூலம் அறிவிக்கும் திட்டங்களில் பலன்கள் கிடைக்கவும், வங்கிகள் மூலம் பலன்கள் கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தக்க உதவி செய்யப்படும்.
உள்ளூர் தொழிற்சாலைகளில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், அரசு சலுகைகள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் துறை அலுவலர்கள் தங்களது துறை மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விளக்கி பேசினர்.
இந்தக் கூட்டத்தில் 18 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ட்ரூ அய்யாசாமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.