ரூ.500 கோடி மதிப்பிலான சிலை மீட்பு.. சிலை திருட்டு கும்பலை கூண்டோட தூக்க திட்டம்..? தஞ்சாவூரில் பரபரப்பு

By Thanalakshmi VFirst Published Dec 31, 2021, 6:16 PM IST
Highlights

தஞ்சாவூரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். 

தஞ்சாவூரில் ஒரு வீட்டில் மிகவும் பழமையான விலை மதிப்பற்ற கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்த காவல்துறையினர் தஞ்சாவூரில் அருளானந்த நகர் 7 ஆவது குறுக்கு தெரு உள்ள அந்த வீட்டில் தீவிர சோதனையிட்டனர்.

மேலும் வீட்டில் இருந்த அருண் பாஸ்கர் என்பவரிடம், ஏதேனும் தொன்மையாக கோயில் சிலைகள் தங்கள் வசம் உள்ளதா என்று விசாரணை செய்தனர். அதற்கு அவர், தனது தந்தை சாமியப்பன் இடம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. அந்த சிலை தற்போது வங்கி லாக்கரில் வைத்துள்ளதாக  கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அருண் பாஸ்கரிடம் மரகதலிங்கம் சிலை,உங்கள் தந்தையிடம் எப்படி,யார் மூலமாக, எப்பொழுது கிடைத்தது என்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வேறு யாராவது கொண்டு வந்து கொடுத்தார்களாக என்று பல்வேறு கோணங்களில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த சிலை தொடர்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அவர் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு கேட்ட போது வங்கியில் இருந்து எடுத்து வந்து ஆஜர்படுத்தப்படுத்தினர். தஞ்சையில் மீட்கப்பட்ட  மரகதலிங்கம் சிலை 2016ல் நாகை திருக்குவளையில் உள்ள கோயிலில் காணாமல் போனது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆய்வாளர் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கூறுகையில், தமிழகம் முழுவதும் திருட்டுப்போன  கோயில் சிலைகள் குறித்து ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசியமாக தகவல் வந்ததின் பேரில், கடந்த சில நாட்களாக அந்த வீட்டை நோட்டமிட்டோம். பின்னர், வீட்டிற்குள் சோதனையிட சென்ற போது, சாமியப்பன் மகன் அருண் பாஸ்கர் மட்டும் இருந்தார் என்று தெரிவித்தார்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தையிடம் விலை மதிக்கமுடியாத வகையில், மிகவும் தொன்மையான 8 செ.மீ உயரத்தில், 530 கிராம் எடை கொண்ட மரகத லிங்கம் இருப்பதாக கூறினார். ஆனால் வங்கி லாக்கரில் இருப்பதாக தெரிவித்ததால், அந்த சிலையை மீட்டுள்ளோம். தற்போது சென்னையிலுள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். வரும் திங்கட்கிழமை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் நீதிபதி உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

click me!