புத்தாண்டு அன்று என்னை பார்க்க வாராதீங்க... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

By Narendran SFirst Published Dec 31, 2021, 3:32 PM IST
Highlights

புத்தாண்டு தினத்தில்  என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

புத்தாண்டு தினத்தில்  என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான 2022 ஜனவரி 1 ஆம் நாளில், அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பலரும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த எண்ணத்தை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

எனினும், கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்தக் கடமையை உணர்ந்தவர்களாகக் கழகத்தின் உடன்பிறப்புகளாகிய நீங்களும் இருப்பதால், உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டு, புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று என்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா இரண்டாம் அலையின் பெரும்தாக்கத்தில் தமிழ்நாடு தவித்த நேரத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதனைத் திறம்படக் கட்டுப்படுத்தியதுபோல, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையும் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்.

எனவே அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை மேற்கொள்ளுங்கள். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!