
கூடலூர் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று சாலையில் வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தற்போது பலாப்பழம் சீசன் இருந்து வருகிறது. அங்குள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான பலா மரங்களில் தற்போது பலாப்பழங்கள் பழுக்கத் தொடங்கியுள்ளன. இந்தப் பழங்களை சாப்பிட யானைகள் அடிக்கடி ஊருக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்நிலையில் யானைகளிடம் இருந்து பலாப்பழங்களைப் பாதுகாக்க ஒரு சில விவசாயிகள் பலாப்பழத்துக்குள் நாட்டு வெடி குண்டுகளை வைத்துவிடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்கவிற்குட்பட்ட சேரம்பாடி கண்னம் வயல் பகுதியில் பலாப்பழத்தில் வைத்திருந்த குண்டு வெடித்து கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானை ஒன்று வாயில் காயங்களுடன் சுற்றி திரிந்தது.
அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் மெத்தனம் காட்டிய நிலையில் நேற்று அப்பகுதிக்கு வந்த யானை வலியால் சாலையில் வந்தவர்களை துரத்தியது. பின்னர் நேற்று காலை 7 மணிக்கு வழுக்கி விழுந்த யானை பல மணி நேரம் உயிருக்கு போராடி தவித்து வந்தது.
யானை விழுந்து பல மணி நேரம் ஆகியும் கால்நடை மருத்துவர்கள் இல்லாமல் யானை உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தது. ஏற்கனவே கடந்த மாதம் உரிய சிகிச்சை அளிக்காததால் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் தற்போது மற்றுமொரு யானை இறந்திருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.