
சென்னையில், கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ப்ளூ டார்ட் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக சரக்கு வாகனம் அடையாறு நோக்கி சென்றது.
கிண்டி கத்திப்பாரா பாலத்தைக் கடந்த போது கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில், வாகனத்தின் ஓட்டுநர் முத்துராஜ் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்.
சாலையின் நடுவே சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் கிரேனை வரவழைத்து, சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.