
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகள்
முரண்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து இறுதி தீர்ப்பு வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும், அந்த நீதிபதியை மூத்த நீதிபதியான குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை... இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18-ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆ... ஆங்! எனக் குறிப்பிட்டு இரண்டு திருநங்கைகளின் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பதிவுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருநங்கைகளின் புகைப்படத்தை நீக்கிய கஸ்தூரி சிறிது நேரம் கழித்த அது தொடர்பான பதிவையும் நீக்கிவிட்டார்.
இந்த பதிவு தொடர்பாக மன்னிப்பு கேட்டு கஸ்தூரி மற்றொரு பதிவையும் வெளியிட்டார். அதில், இதுபோன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுக்களை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதின் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.