மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி… பணியின் போது ஏற்பட்ட சோகம்!!

By Narendran SFirst Published Aug 13, 2022, 5:42 PM IST
Highlights

காஞ்சிபுரத்தில் மின்வாரிய ஊழியர் ஒருவர் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காஞ்சிபுரத்தில் மின்வாரிய ஊழியர் ஒருவர் பணியின் போது மின்சாரம் தாக்கி மின் கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், வயர்மேனாக பணியாற்றி வருகிறார். 46 வயதான இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று நள்ளிரவு அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது, சாலை விரிவாக்க பணிக்கு சென்ற கனரக லாரி ஒன்று மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.

இதையும் படிங்க: மதுரை வீரர் லட்சுமணன் வீர மரணம்.. ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் !

இதை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். வயர்மேன் மோகன்ராஜ் மதுபானக் கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றி அவளூர் மார்கமாக செல்லும் லைனை இயக்க முயன்ற போது திடீரென மோகன்ராஜ் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் மின் கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: உணவுத் திருவிழாவில் ”பீப் பிரியாணி”.. சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு திடீர் அனுமதி

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற சக மின் ஊழியர்கள் வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தலைமை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் மின் கம்பத்தில் ஏறி மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர். வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு பணியின் போது மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

click me!