டிசம்பர் 31 க்குள் உள்ளாட்சி தேர்தல் கிடையாது - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

First Published Nov 28, 2016, 6:23 PM IST
Highlights


நீதிமன்ற கெடு விதித்தபடி டிச 31 க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கப்படாமல் தேர்தலை அறிவித்துள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மேற்கண்ட முறைகளை கலைந்து டிச 31.க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கடந்த மாதம் 7ம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் பி.குமார் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

அதன் பேரில் இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் , பார்த்திபன் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பின்னர், இந்த வழக்கை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் மணலியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது வார்டை எஸ்.சி. வார்டாக அறிவித்துள்ளதாக கூறி  அதை மாற்ற உத்தர்விட கோரி வழக்கு தொடர்ந்தார். இதே போல் மேலும் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
 இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஆஜரான தேர்தல் ஆணையதரப்பு வழக்கறிஞரிடம் ஏற்கனவே டிசம்பர் 31 க்குள் தேர்தலை நடத்தவும் , வேட்பாளர்களில் குற்றப்பின்னனி உள்ளவர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கவும் , இட ஒதுக்கீடு குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டார். 


அப்போது தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலைகள் அனைத்தும் துரிதமாக நடந்து வருகிறது. ஆனால் நீதிமன்றம் அறிவித்த டிசம்பர் 31 காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.

click me!