
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியானது முதல் கட்டமாக பீகார் மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிரடியாக 21.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தில் இறுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இன்று வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்க உள்ள நிலையில் அதிகாரிகள் வீடு வீடாக வாக்காளர் பட்டியலுடன் ஆய்வு மேற்கொள்வார்கள். 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்குவார்கள். அதனை பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவே இந்த பணி மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இதனிடையே தேர்தல் ஆணையத்தின் SIR பணிக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, தமிழகத்தில் கண்டிப்பாக SIR பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்து வருகிறது. இன்று தொடங்கும் திருத்தப்பணி வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.