
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க மேலும் 5 மேற்பார்வையாளர்களை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தன. இதனைத் தொடர்ந்து மேலும் 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் மத்திய பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை கண்காணிக்க துணை ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்தார். பாதுகாப்பு பணிகள், வாக்குச்சாவடிகள், குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் விவாதித்தார்.
இந்தச் சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிக்காக எடுக்கபபட்ட நடவடிக்கைகள் மற்றும் புகார் குறித்து விரிவான அறிக்கையை உமேஷ் சின்ஹா தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். இதனைத் தொடர்ந்து பல அதிரடி உத்தரவுகளை ஆணையம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " ஆர்.கே.நகருக்கு மேலும் 5 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர், காவல் ஆய்வாளர், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் என அனைவரையும் மாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஊழியர்களை பயன்படுத்தலாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு வாகனங்கள் எதுவும் ஆர்.கே.நகருக்குள் நுழையக் கூடாது என்றும் அமைச்சர்களின் வாகனங்கள் வந்தால், அவற்றை சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து 115 காவல் உதவி ஆய்வாளர்கள் உடனடியாக பணியிடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.