பொன்முடி அமைச்சராவது பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: சத்யபிரதா சாஹூ

By SG Balan  |  First Published Mar 16, 2024, 6:43 PM IST

தமிழக அரசு சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க அனுமதி கோரலாம் என்றும் அதனைப் பரிசீலித்துத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் தெரிகிறது.


சொத்துக்குவிப்பு வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளதை அடுத்து, பொன்முடி  மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து, சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அவர் மார்ச் 13ஆம் தேதி முதல் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

Tap to resize

Latest Videos

பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆனால், மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட சூழலில் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. ஆளுநர் சென்னை திரும்பிய பிறகும் தேர்தல் நடத்தி விதிமுறைகள் காரணமாக பொன்முடி அமைச்சராக முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலையில்  செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்து பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க அனுமதி கோரலாம் என்றும் அதனைப் பரிசீலித்துத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் தெரிகிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பொன்முடி அமைச்சராவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் ஆளுநர் ரவி டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு வந்ததும் பதவியேற்பு நடைபெறும் என்றும் கூறியிருந்த நிலையில், தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவின் கருத்து புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!

click me!