எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

Published : Jul 11, 2023, 10:25 AM ISTUpdated : Jul 11, 2023, 10:44 AM IST
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

சுருக்கம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது

சென்னை அருகே வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து விரிவாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்துக்குள்ளாகவே கட்சிகளின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றி விடும்.

ஆனால், அதிமுக விஷயத்தில் பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றம் சென்றது. அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு சட்டப்போராட்டங்களில் இறுதியாக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுக வந்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு பதவியேற்றார்.

ஆனாலும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்திய போதும், அந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்தது. இது  தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கும் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கையும் டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்யப்பட்டது உட்பட, அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதன்படி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரித்து தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

டெல்லிக்கு வர எடப்பாடிக்கு அழைப்பு விடுத்த பாஜக தலைமை.! ஓபிஎஸ்யை கை கழுவியதா.? வெளியான பரபரப்பு தகவல்

நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பதிவேற்றம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை
TVK vijay: தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்.!