தேனியில் தம்பி இறந்த சோகத்தில் எட்டு மாதங்களாக குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த அண்ணன் மனவிரக்தியில் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி
தேனியில் தம்பி இறந்த சோகத்தில் எட்டு மாதங்களாக குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த அண்ணன் மனவிரக்தியில் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம், கெஞ்சயன்குளம், ஆலமரம் மேற்குத் தெருவில் வசிப்பவர் அறிவுச் செல்வன் (35). இவர் காஞ்சிபுரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்துவந்தார். இவரது மனைவி நிரஞ்சனா. மகள்கள் அனுஸ்ரீ, தனுஸ்ரீ.
மனைவி மற்றும் மகள்கள் கம்பத்திலும், அறிவுச்செல்வன் காஞ்சிபுரத்திலும் உள்ளார். தனியாக வசித்துவந்த அறிவுச்செல்வன் வாரத்தில் ஒருமுறை தனது மனைவி, மகள்களைப் பார்க்க ஊருக்கு வருவது வழக்கம்.
எட்டு மாதங்களுக்கு முன்புதான் இவரது தம்பி கார்த்திக்செல்வம் இறந்துவிட்டார். இந்த எட்டு மாதங்களாக தம்பியை இழந்த சோகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு கிடந்தார் அறிவுச்செல்வன் இதனால் அவர் குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டார். இதனால் அறிவுச்செல்வனை, மனைவி நிரஞ்சனா கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல வீட்டுக்கு சாராயம் குடித்துவிட்டு வந்த அறிவுச்செல்வன், தனது தம்பியை நினைத்து அழுதுபுலம்பி உள்ளார். அப்போது குடிப்பழக்கத்தை விடுமாறு மனைவி மீண்டும் சத்தம் போட்டுள்ளார்.
இனி குடிக்க மாட்டேன் என்றும் தூங்கச் செல்வதாகவும் கூறிவிட்டு அறைக்குச் சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அறிவுச்செல்வன் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நிரஞ்சனா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்தார்.
அங்கு அறிவுச்செல்வன் மின் விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்டு பிணமாகத் தொங்கினார். இதனைப் பார்த்த நிரஞ்சனா மற்றும் மகள்கள் கதறினர். இதுகுறித்து காவலாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தெற்கு காவலாளர்கள் அறிவுச்செல்வனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தம்பி இறந்த சோகத்தில் குடிப் பழக்கத்திற்கு அடிமையான அண்ணன், மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.