
கரூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். தனது உரையில், அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
"எதிர்க்கட்சித் தலைவருக்கான மாண்பை அறியாதவர் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் என்னைப் பார்த்து ஒருமையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு திராவிடக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியாது. அ.தி.மு.க.வினர் முதலில் அண்ணா இசம் என்று சொன்னார்கள். ஆனால், இன்று அண்ணா இசத்தை அடிமை இசமாக ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி" என்று கூறினார்.
மேலும், பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் தமிழகத்தை பாஜகவிடம் அடமானம் வைத்ததாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். "ஒன்றிய அரசின் கொள்கைகளை நேருக்கு நேர் நின்று துணிந்து எதிர்கொள்வது திமுகதான். டெல்லியின் ஆதிக்கம் ஒன்றா இரண்டா? இந்தி திணிப்பு, வாக்குரிமை பறிப்பு போன்றவற்றுக்கு 'நோ என்ட்ரி'தான். மொத்தத்தில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 'நோ என்ட்ரி'தான்" என்று அழுத்தமாகத் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசின் மீது குற்றம்சாட்டிய முதலமைச்சர், "தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு. இது ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டம் மட்டும் அல்ல, தமிழகத்தை மீட்பதற்கான போராட்டம்" என்று குறிப்பிட்டார்.
"மீண்டும் ஒரு உரிமைப் போர் நடத்தி நாட்டைக் காக்கும் கடமை நம்மை அழைக்கிறது. தமிழின உணர்வு நம்முடனேயே இருக்கிறது. ஒருபோதும் தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டோம்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.