அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் பதிலடி!

Published : Jun 06, 2025, 12:59 PM IST
Edappadi Palaniswami

சுருக்கம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Edappadi Palaniswami Responded to MK Stalin Regarding Constituency Realignment: இந்தியாவில் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இதனால் தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையும், வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இதற்கிடையே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு தள்ளிப் போட்டுள்ளது.

பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், ''2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன்?

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை முதல் ஆளாக எதிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்" என்ற திரைப்பட காமெடி போல இருக்கிறது மு.க.ஸ்டாலினின் இந்த ட்வீட். தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதே தெரிவித்தது நான்.

திமுக கூட்டணி அடிமை கட்சிகள்

என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும்! கூட்டணி அறிவிக்கையின் போதே அடிமை சாசனமும் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை!

இந்தி திணிப்பு

"புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான Goal Post மாற்றும் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் #Delimitation குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள்.

மடைமாற்று அரசியலை கைவிடுங்கள்

ஆனால் தமிழகத்தின் நடக்கும் இந்த திருட்டு முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப் படுகிறார்கள்! ஸ்டாலின் அவர்களே- மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியசத்தையும், திருட்டுக்களையும், உருட்டுக்களால் அல்லாமல், களத்தில் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள்''என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!