வரிக்குதிரைக்கு மேல் உள்ள வரிகளை கூட எண்ணி விடலாம்.! எண்ண முடியாத அளவிற்கு வரிகளை விதிக்கும் திமுக அரசு-இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jul 16, 2024, 11:47 AM IST

நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


மின் கட்டண உயர்வு- அதிமுக எதிர்ப்பு

மின் கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 

Tap to resize

Latest Videos

தேர்தல் வெற்றி இருமாப்பில் கட்டணம் உயர்வு

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு. பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள். குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு. தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.

சொல்லாததையும் செய்துவிட்டார்

அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய திரு. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!

விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அப்போ மத்திய அரசை கைகாட்டுனீங்க.. இப்போ மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்ட போறீங்க- கேள்வி கேட்கும் சீமான்

click me!