EPS : 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்றதற்கு இது மட்டும் தான் காரணம்.! வேதனையோடு கூறிய எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Jun 5, 2024, 8:39 AM IST

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


அதிகார, பணபலம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியு்ள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன. தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல 

Tap to resize

Latest Videos

'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று தவவாழ்வு வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் உருவாக்கி, கட்டிக்காத்து, வழிநடத்திய அதிமுக சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சியையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்ட கழகத் தொண்டர்களின் அன்புக் கட்டளைகளுக்கு ஏற்பவே, "கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம்" என்று இந்தத் தேர்தலில் களம் இறங்கியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

என்னுடைய பெயரிலேயே பல சுயேட்சைகள்.. கங்கணம் கட்டி தோற்கடிச்சுட்டாங்க.. தர்மத்தை மறக்காத ஓபிஎஸ்!

தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்

காட்டிலே ஒடும் முயலைக் குறி தவறாது கொன்ற அம்பைவிட, யானையின் மேல் குறி வைத்து தவறிப்போன வேலைத் தாங்குதல் வீரனுக்கு அழகாகும் என்ற திருவள்ளுவரின் பொது வாழ்வு இலக்கணத்திற்கு ஏற்ப, இந்தத் தேர்தலை கனநேர சிறிய வெற்றிக்காக அல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம். 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில், மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்காமல்,பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.

“இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வளவுதான்" என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும்; 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவின்போதும்; ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், நம் கதை முடிந்ததாக ஆரூடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு. 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம். இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 

தமிழக மக்களுக்கு நன்றி

2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அதிமுக மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். 'உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.' என்று கண் கலங்குகிறேன். 

இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற திரைப்படப் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

DMK : திமுக அலையில் சிக்கி காலியான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் டெபாசிட்.!எத்தனை தொகுதிகளில் தெரியுமா?

click me!