எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் செய்திகளை பரப்புவதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை இன்றைக்கு பரப்பிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரைக்கும், நாங்கள் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சொல்வதிலே எந்தவிதமான தவறும் கிடையாது.
அதிமுக ஆட்சியில் குற்றச் சம்பவம் அதிகம்
கடந்த 20 ஆண்டுகால வரலாற்று புள்ளி விவரங்களை நாம் எடுத்து பார்த்தோமேயானால், அதிகமாக 2012-ஆம் ஆண்டில் நடந்திருக்கின்ற குற்றச் சம்பவங்கள் 1943 - 2013-ல் 1927 - கடந்த ஆண்டில் 1540. மக்கள் தொகை பெருகுகிறது; குற்றச் சம்பவங்கள் பெருகுகிறது என்றெல்லாம் சொல்கின்ற இந்த நேரத்தில், அதிமுக ஆட்சியில், அம்மையார் ஆட்சியிலும் சரி, எடப்பாடி ஆட்சியிலும் சரி அன்றைக்கு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே தெரியும். ஆனால், ஒரு சில தொடர் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு அதன் மூலமாக ஏதோ தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கின்ற தவறான தகவல்களை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பரப்பி வருகின்றார். அதற்குக் காரணம் தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு அமைதி பூங்கா
அந்த தொழிற்சாலைகள் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழக மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுகிறது. இதையெல்லாம் கண்டு பொறாமை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்கின்ற காரணத்திற்காக, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏதோ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கே எதற்கும் அமைதி பூங்கா இல்லை என்ற தவறான தகவல்களை பரப்பி, மக்களை அச்சுறுத்தி வருகின்றாரே தவிர, எந்த இடத்திலும், எந்த காலத்திலும் அவர்களுடைய காலத்தில் நடைபெற்றது போல தூத்துக்குடி சம்பவமோ, பரமக்குடி சம்பவமோ அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களோ, கலவரங்களோ எதுவும் எங்களுடைய இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் கிடையாது. இது ஒன்றே போதும் - தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதையும் படிங்க: நமது எதிரி இவர்கள் தான்! திமுகவுக்கு வேலை பார்க்கும் அண்ணாமலை! இறங்கி அடித்த ஆதவ் அர்ஜூனா!
சிறந்த காவல்துறை
அதைப் போல, உங்களை எல்லாம் சந்திக்கின்ற பொழுது உசிலம்பட்டியில் நடந்த ஒரு சம்பவம் பற்றி சொல்லியிருக்கிறார். அந்த சம்பவம் ஒரு காவல்துறையைச் சார்ந்த ஒரு காவலர் சம்பந்தப்பட்ட சம்பவம். ஆனால், அது அவர்களுக்குள்ளே அவர்களது உறவினர்கள் அவர்களுக்குள்ளே உண்டான பகை சம்பந்தமாக அந்த காவலர் தன்னுடைய பணியில் இல்லாமல் தன்னுடைய தோட்டத்தில் இருக்கின்ற போது அவர்களுக்குள் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லி இருக்கிறார். காவலருக்கே இந்த ஆட்சியிலே பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார் என்று சொன்னால், இதை விட வெட்கக்கேடு என்னவாக இருக்க முடியும். வீட்டில் சென்று அவர் இருக்கும் போது அவர்களின் உறவினர்களுக்கும், அவர்களுக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை. அதில் யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை இன்றைக்கு காவல்துறை கண்டறிந்திருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஒரு குற்றச்சம்பவம் நடந்தவுடன், கைது செய்து அந்த குற்றத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவது தான் கடமை. ஈரான் நாட்டுக் கொள்ளையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று மணி நேரத்தில் நம்முடைய காவல்துறை விமானத்தை நிறுத்தி அவர்களை கைது செய்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று சொன்னால், இதைவிட சிறந்த காவல்துறை இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கிறது என்பதை மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்தாக வேண்டும்.
இராணிய கொள்ளையர்கள்
அந்த அளவுக்கு நம்முடைய காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், அவர்களை நோகடிக்கும் வண்ணம் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை சொல்லி அவர்களை அசிங்கப்படுத்தி அவர்களின் வேகத்தை தடுக்கின்ற வகையில் அவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்குகின்ற வகையில், இன்றைக்கு அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை எந்த குற்றத்தையும் கண்டுபிடிப்பதற்கு நிச்சயமாக, உடனடியாக கண்டுபிடிப்பதற்கு தயாராக இருக்கிற ஒரு துறை. கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துகின்ற ஒரு துறை.
எனவே எப்படி இராணிய கொள்ளையர்கள் என்று சொல்லப்படுகின்ற மராட்டியத்தை சேர்ந்தவர்களை நாங்கள் உடனடியாக 3 மணி நேரத்திற்குள் கைது செய்து இருக்கின்றோமோ, அதுபோல, எந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தாலும் அந்த சம்பவம் நடந்த உடனேயே அவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்துகின்றோம். ஒரு சம்பவம் எங்கே நடக்க போகின்றது என்பதை யாரும் ஜோசியம் பார்க்க முடியாது. உங்கள் மனசாட்சிக்கு தெரியும். இங்கே இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. ஆனால், நடந்து விட்டால் நடந்ததை தடுக்க வேண்டும்; தெரிந்தால் தடுக்க வேண்டும். எங்களது knowledge-க்கு வந்ததை தடுத்திருக்கிறோம். நடப்பதை தடுத்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதையும் படிங்க: வெறுப்புணர்வு பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பதா? யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சீறிய ஸ்டாலின்!!
பெண்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கும் இபிஎஸ்
அதேபோல் தவறாக சிவகங்கையில் ஒரு பெண் டாக்டர் கடத்தப்பட்டார் என்ற ஒரு பொய்யான தகவலை இங்கே சொல்லி இருக்கின்றார். அங்கே டாக்டர் கடத்தப்படவில்லை. அங்கே நடத்த சம்பவம் உடனடியாக தடுக்கப்பட்டிருக்கிறது. கடத்தலில் ஈடுபடவில்லை இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அங்கே ஒரு சம்பவம் நடத்திருக்கிறது. அதற்கு காரணமானவர்களை இன்றைக்கு அரசாங்கம் கண்டுபிடித்து இருக்கிறது.
எனவே, கடத்தல் என்று சொல்வதும், அங்கேயும் தவறான ஒரு பிரச்சாரத்தை செய்கின்றார்கள். அதற்கு காரணம் பெண்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டும். பெண்கள் மத்தியில் வெளியில் நடமாடுவதை தடுக்க வேண்டும். இன்றைக்கு பெண்கள் தான் தமிழ்நாட்டில் சுதந்திரமாக உலா வந்து 41% பெண்கள் வேலைக்குச் செல்கின்ற மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் இன்றைக்கு பணப்புழக்கம் அந்த பெண்கள் மூலமாக தன்னுடைய சொந்த வருவாயின் மூலமாக அந்த குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கு வந்திருக்கிறார்கள். எனவே இதை கண்டு பொறுக்க முடியாமல், பெண்களுக்கு அச்சத்தை உருவாக்குவதற்கும் இப்படிப்பட்ட ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.