
மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆஜரானார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் முதற்கட்டத்திலேயே கடந்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் இந்தியாவில் விரல் விட்டு எண்ணப்படக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவரான தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை.” என குற்றம் சாட்டினார்.
வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்யும் பிரதமர் மோடி: கங்கையில் வழிபாடு!
ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டே தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய் பிரசாரம் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டிய தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை.
இதையடுத்து, மத்திய சென்னை திமுக எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கானது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உத்தரவிட்டது.