
அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி திட்டம் : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கடசிகள் கூட்டணி தொடர்பான ஆலோசனையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், திமுக தங்களது கூட்டணியை பலப்படுத்தி வரும் நிலையில், அதிமுக, திமுக கூட்டணியை வீழ்த்த புதிய, புதிய காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் மேற்கொண்ட அதிமுக, அடுத்தாக தங்கள் அணியில் தேமுதிக நீடிப்பதை உறுதிப்படுத்த முயன்று வருகிறது. ஆனால் அதற்கு இடையூறாக ராஜ்யசபா சீட் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு அதிமுக ராஜ்யசபா சீட் தருவதாக உறுதியளித்தாக பிரேமலதா தெரிவித்துள்ளார்
ஆனால் அப்படி எந்த வித வாக்குறுதியும் கொடுக்கவில்லையென அதிமுக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தான் ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவித்த நிலையில் இந்த பிரச்சனை மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுக தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டியது கடமை என தெரிவித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்காமல் அதிமுகவினருக்கே வாய்ப்பு வழங்கியுள்ளார். அதே நேரம் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலின் போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கு அரசியல் விமர்சகர்கள் கூறும் காரணம் தான் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. அன்புமணி மற்றும் ஜி.கே.வாசன் அதிமுகவின் வாக்குகளால் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்கள். அதிமுக, பாஜக கூட்டணி உடைந்த போது நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவின் அன்புமணி ராமதாஸ், தமாகவின் ஜி கே வாசன் ஆகியோர் அதிமுகவின் பக்கம் நிற்காமல் பாஜக கூட்டணியில் பங்கு வகித்து அதிமுகவிற்ககு எதிராகவே போட்டியிட்டனர். இதனால் அதிமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இதே போல தேமுதிகவிற்கு தற்போது ராஜ்யசபா சீட் வழங்கினால் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியை கை கழுவி விட்டு திமுக அல்லது விஜய் கட்சியோடு கூட்டணி அமைத்து விட வாய்ப்பு இருப்பதாக கருதுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தான் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இடம்பெற செக் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் தொடர்பாக அதிமுக கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிடும். அடுத்தாக வேறு கூட்டணிக்கு தேமுதிக செல்வதும் தடுக்கப்பட்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால் பிரேமலதா விஜயகாந்தோ, 2024 தேர்தலின்போது ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுகவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 2026 தேர்தலை மனதில் வைத்து அதிமுக தற்போது செயல்படுகிறது. எனவே தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிக்கப்படும் என தெரிவித்துளார்.