
ஒக்கி புயல் உயிர் குடித்துவிட்டு துப்பிய கன்னியாகுமரி மீனவர்களின் உடல்கள் கடலில் மிதந்தபோது தேசமே நடுங்கியது. ’யே யேசப்பா எம் புருஷன இப்படி காத்து தின்ன கைதூக்கி கொடுத்துட்டியே!?’ என்று மீனவ பெண்கள் பெரும் கண்ணீர் வடித்து அழுதபோது வலுவாய் கைகொடுத்து அந்த சகோதரிகளுக்கு ஆறுதல் சொல்ல முதல் அமைச்சர் அங்கில்லை.
ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பாளர் யார்? கோயமுத்தூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, மதுசூதனனுக்கு பிரச்சாரம் உள்ளிட்ட அம்புட்டு பஞ்சாயத்துக்களையும் முடித்துவிட்டு ஒரு வழியாக நேற்று கன்னியாகுமரி பக்கம் தலை காட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடலில் மிதந்த மீனவர் உடல்கள் கரை ஒதுங்கி கருவாவாடாய்க் காய்ந்த பின் குமரி மண்ணில் கால் வைத்த முதல்வர் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி.
குமரிக்கு வந்தவர் மக்கள் மத்தியில் உட்கார்ந்து ஆறுதல் சொல்வார் என்று பார்த்தால் சரிந்த வாழை மரங்களையும், ஒடிந்த ரப்பர் மரங்களையும் போய்ப் பார்த்து அவற்றை தடவி வருத்த முகம் காட்டினார். இதை மிக கடுமையாகவே விமர்சிக்கின்றனர் விமர்சகர்கள்...
சம்பிரதாயத்துக்கு சில இடங்களில் அமர்ந்து மக்களுக்கு ஆறுதல் சொன்னாரே தவிர ஆத்மார்த்தமார்அண்ட்ஜ க குமரி வருத்தத்தில் ஐக்கியமாகவில்லை முதல்வர். இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்சம் தருவதாய் அறிவித்ததும், அவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்பதும் ஆறுதலான செய்திதான். ஆனால் அதெல்லாம் நடந்தால்தான் ஆச்சு.
காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக முதல்வர் பேசியதுதான் மிகப்பெரிய குழப்பம் மற்றும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது மக்களால். அதாவது தூத்தூர் கல்லூரியில் பாதிரியார்கள் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசியபோது “காணாமல் போன கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணிகள் தொடரும். மீனவர்களை மீட்பதே தலையாய கடமை” என்று காணாமல் போன மீனவர்கள் உயிரோடு இருப்பதாக தான் நம்பும் தொனியில் பேசினார்.
பிறகு அவரே “காணாமல் போன மீனவர்களை இறந்ததாக அறிவிப்பது குறித்து தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரக்ளை இறந்ததாக அறிவிப்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை பிறப்பித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.” என்று சொல்லி காணாமல் போன மீனவர்கள் இறந்து விட்டனர் எனும் தோற்றம் வரும் தகவலை பூடகமாக, சுற்றி வளைத்து, மீனவர் பிரதிநிதிகளின் தலையிலேயே ஏற்றி சொல்லியிருக்கிறார்.
’மீனவர்களை மீட்பதே தலையாய கடமை’ என்று சொல்லியதன் மூலம் மீனவர்கள் உயிரோடு இருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினார். இதில் மீனவ பிரதிநிதிகள் மகிழ்ந்தனர். காரணம் முதல்வர் ஒரு தகவலை சொல்கிறார் என்றால் அது போலீஸ், உளவுத்துறை, கடலோர பாதுகாப்பு, கடற்படை ஆகியோரின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகத்தானேஇருக்கும்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ‘இறந்ததாய் அறிவிக்க அரசாணை’ என்று அவர் சொல்லியது சந்தோஷித்திருந்த மீனவ பிரதிநிதிகளை கன்னாபின்னாவென குழப்பி, கலங்க வைத்துவிட்டது.
அப்படியானால் குத்துமதிப்பாகத்தான் சூழலுக்கு ஏற்ப பேசுகிறாரா முதல்வர்? இது ஒரு முதல்வருக்கு அழகா? சூழ்நிலை இவ்வளவு சென்சேஷனாலாக இருக்கும் பட்சத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை தந்து மக்களை உஷார் படுத்தியிருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் மக்கள் கொந்தளிப்பார்கள் என்று நினைத்து அவர்களிடம் சொல்ல தவிர்த்திருந்தாலும், எங்களிடமாவது அதிகாரப்பூர்வ தகவல்களை பகிர்ந்திருக்கலாமே! என மீனவ சங்க பிரதிநிதிகள் புலம்பிக் கொட்டுகிறார்கள்.
இந்த குளறுபடியா முதல்வருக்கு அழகு? என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.” என்கிறார்கள் விமர்சகர்கள்.