
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம்தான் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராக பெரிய பாண்டி என்பவர் பொறுப்பேற்றார்.
இதையடுத்து கொளத்தூரில் கடந்த மாதம் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க பெரிய பாண்டி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ராஜஸ்தான் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை ராஜஸ்தானில் கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றனர்.
காவல் ஆய்வாளர் உயிரிழப்புக்கு காரணம் கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் போலீசார் உதவவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் உயிரிழக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்த 4 போலீசார்களின் மருத்துவ செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் காவல் ஆய்வாளரின் மகன்கள் படிப்பு செலவை அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த போலீசாருக்கு இழப்பீடு தொகையாக தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் போலீசார் மீது தாக்கியவர்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே பெரிய பாண்டி கொலை குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆய்வாளரின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 1 கோடி தரவேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.