வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருப்பலி; ஆயிரக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை...

First Published Apr 2, 2018, 9:56 AM IST
Highlights
Easter Tirupali in Velankanni st arokiyamatha church Thousands prayed candle in hand ...


நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைப்பெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிராத்தனை செய்தனர். 

கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த மாதம் 25-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி பெரிய வியாழன் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி புனித வெள்ளி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். 

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்களிலேயே மிக முக்கிய திருவிழாவாக ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திலும் ஈஸ்டர் திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தவக்கால பிரார்த்தனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஈஸ்டர் திருநாளையொட்டி இயேசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. 

இதனையடுத்து இரவு 10.45 மணிக்கு வேளாங்கண்ணி பேராலய கலை அரங்கத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்கின. இதன் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் இயேசு உயித்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி“ ஏற்றப்பட்டது. 

கலையரங்க வளாகத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். பின்னர் பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் ஆயிரக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியப்படி கலந்துகொண்டனர். 

இரவு 11.45 மணியளவில் வாண வேடிக்கைகள் முழங்க, மின்னொளியில் பேராலய கலையரங்கின் மேற்கூரையில் சிலுவை யோடு கொடியை கையில் தாங்கியபடி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நள்ளிரவு 1.30 மணிவரை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மேலும், ஈஸ்டர் பெருநாளையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த கிறிஸ்தவர்கள் பேராலயத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் திரண்டிருந்தனர். ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

ஈஸ்டர் திருநாளையொட்டி நேற்று பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

இதனைத் தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.  

click me!