சேலம், தருமபுரியில் நிலநடுக்கம்.. வீடுகளில் விரிசல்.. மக்கள் பீதி!! உதவி எண் அறிவிப்பு

First Published Jul 22, 2018, 10:48 AM IST
Highlights
earthquake in some parts of salem and dharmapuri districts


சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 3.3 ரிக்டர் அளவுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாநகரின் கோட்டை, கன்னங்குறிச்சி, கோரிமேடு, நாராயண நகர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, நங்கவல்லி, சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 

இந்த நில அதிர்வால், பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து, வீடுகளை விட்டு வெளியேறினர். சேலத்தை மையமாகக் கொண்டு புவிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தைப்போலவே தருமபுரி மாவட்டத்தின் பெண்ணாகரம், ஏரியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் பாதிப்பு ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலநடுக்கம் உணரப்படும் நேரத்தில் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், கட்டிடங்களில் இருந்து இறங்க லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார். பாலங்கள், உயர்மின்னழுத்தக் கம்பிகள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றின் அருகில் நிற்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்ப்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077ஐத் தொடர்புகொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

click me!