
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அளிக்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கன மழை தொடர்ந்து விடிய,விடிய கொட்டித் தீர்த்தது. வெளுத்து வங்கிய இந்த முக்கிய சாலைகள் முழுவதும் ஆறு போல் நீர் ஓடியது. கார்கள், பேருந்துகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தபடி செல்வதால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கனமழை காரணமாக சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அவர்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டில் இருந்தபடியே பணி செய்ய ஊழியர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.