
வட கிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூர், திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேர் மாநிலம் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென பெய்யத் தொடங்கிய கனமழை, இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதே போல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர், திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேர் மாநிலம் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.