
அடுத்து வரும் சில மணி நேரமும் பயங்கரமான, ஆக்ரோஷமான மழை தொடரும். ஆகவே வீட்டிலேயே இருக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சென்னை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க, பேரிடர் மேலாண்மை ஏஜென்சி அறிவுரை கூறியுள்ளது. அவசர தேவைக்கு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது அது. அந்த எண்கள்...
1913
044 25367823
044 25384965
044 25383694
044 25619206
சென்னையின் பல இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருவதால், இன்றைய இரவு பலருக்கும் மறக்க இயலாத இரவாக மாறிப் போயுள்ளது. 2015 டிசம்பர் 1ம் தேதி இரவு பெய்த மழைக்குச் சற்றும் குறைவு இல்லாமல் கடும் மழைப்பொழிவாக பெய்து வருவதால், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழையால் பொதுமக்கள் பெரும் அவதியைச் சந்தித்து வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் வீடு, கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இடைவிடாமல் பெய்த மழையால் சென்னை மயிலாப்பூரில் வெள்ளம் சூழ்ந்தது. மயிலாப்பூர் சாலைகளில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சிக்கி ஸ்தம்பித்து நிற்கின்றன.
சென்னையைச் சரி செய்ய வேண்டியது மாநகராட்சி. அந்த மாநகராட்சி அமைந்த ரிப்பன் மாளிகையே இப்போது மழை நீரில் மிதக்கிறது. ரிப்பன் மாளிகையைச் சூழந்த மழை நீரால், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழையால் சென்னை பிராட்வே பகுதியில் சாலை வெள்ளக்காடானது. சென்னையில் கனமழையால் ரயில்கள் தாமதமாக இயங்குகின்றன.
மழை காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதனால் பின்னிரவு வரை பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு வெதர்மேன், தனது பதிவில் கனமழை குறித்து தகவல் வெளியிட்டிருந்தார். அதில், கனமழை இருக்கு… பாதுகாப்பாக இருக்கவும்
சென்னையில் அடுத்தகட்ட மழைக்கான அடர்த்தியான மழைமேகங்கள் நகரத் தொடங்கிவிட்டன. இது அடுத்தடுத்து மழையைத் தரும். இந்த மழை அனைத்தும் இரவில் பெய்வதால் மக்களுக்கு சிரமத்தை தரவில்லை. இது மகிழ்ச்சி அளிக்கிறது
இப்போது பெய்து வரும் மழை குறையத் தொடங்கும். ஆனால், மிக அடர்த்தியான மேகக் கூட்டம் ஒன்று இருக்கிறது, இப்போது இருக்கும் மேகக் கூட்டம் சென்றவுடன் அவை வந்து மிக கனமழையைக் கொடுக்கும்.
சென்னை நகரில் 2015ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதிக்கு பின், மிக அதிகபட்சமாக 150மி.மீ இப்போது பதிவாகி இருக்கிறது.
வெள்ளம் குறித்து எந்தவிதமான கவலையும் வேண்டாம். பி.பி.சி. வானிலை அறிக்கை குறித்து எந்த கவலையும் கொள்ளாதீர்கள். வரும்போது பார்த்துக்கலாமே…..
உங்கள் மொபைல்போனை சார்ஜ் செய்துகொள்ளுங்கள், மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்படலாம். இதே சூழல் இன்னும் சில மணி நேரத்துக்கு நீடிக்கும்... என்று பதிவிட்டிருக்கிறார்.