
சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்னும் பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. முடிச்சூர், வரதராஜபுரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தததால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பெரு மழை பெய்யத் தொடங்கியது. வானமே உடைந்ததது போல் கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் ஆறு போல் நீர் ஓடியது. கார்கள், பேருந்துகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தபடி சென்றதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தோ்வுக்கான மறுதேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் தெரிவிதுள்ளார்.