
நீலகிரி
கூடலூரில் கடுமையான வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றுலா பயணிகளைத் தேடி சாலைக்கு வருகின்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூர், முதுமலை பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டில் உள்ள புற்கள் கருகிவிட்டன. மேலும் நீர்நிலைகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் வலுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாள்களாக கூடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்கிறது. இருந்தும், வறட்சியைப் போக்கக் கூடிய அளவுக்கு அந்த மழை பெய்ய போதுமானதாக இல்லை.
தொடர்ச்சியான வறட்சியின் எதிரொலியால் காட்டு விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கத்தால் அரிய வகை நீலகிரி லங்கூர் இன குரங்குகள், மயில்கள், மான்கள் என பலவகை காட்டு உயிரினங்கள் முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் சுற்றுலா பயணிகளிடம் உணவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன.
காட்டு விலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என வனத்துறையினர் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். எனினும், அதையும் மீறி சுற்றுலா பயணிகள் குரங்குகள், மயில்கள், மான்கள் உண்பதற்கு உணவுப் பொருட்களை வீசிச் செல்கின்றனர். இதனால் உணவுக்காக காட்டு உயிரினங்கள் சாலைக்கு வரும் நிலை உள்ளது.
பச்சை புற்களை நம்பி வாழும் மயில், மான் கூட்டங்கள் தற்போது புற்கள் இல்லாத கவலையால் சாலையோரத்துக்கு வந்து உணவுப் பொருட்களுக்காக ஏங்கி நிற்கும் அவல நிலையும் உள்ளது.
பச்சை புற்கள் முளைத்தால்தான், அதில் உள்ள புழு, பூச்சிகளை மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் பிடித்து உண்ணும். தற்போது பச்சை புற்கள் கருகிப்போய் காணப்படுவதால் மயில்கள் வனத்தில் மேய்வதை விட்டு விட்டு உணவுக்கு அலைகின்றன.
இது குறித்து ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த சிலர் கூறியது:
“முன்பெல்லாம் அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியே வருவது அரிது. தற்போது அடர்ந்த காட்டுப்பகுதி காய்ந்த நிலையில் இருப்பதால் அங்கு இருக்க முடியாமல் வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.
அவ்வாறு வெளியேறும் வனவிலங்குகள் அங்கும், இங்கும் சுற்றித் திரிகின்றன. வனப்பகுதியில் தண்ணீர் இருக்கும் இடம் தெரிந்தால் போதும், அந்த இடத்தில் யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பார்க்கலாம்.
தற்போது வனப்பகுதியில் நீர்நிலைகள் எல்லாம் வறண்டு விட்டன. சில இடங்களில் மட்டும் சிற்றோடைகள் செல்கின்றன. இந்த ஓடைகளும் மழை இல்லை என்றால் வறண்டுவிடும்.
தற்போது காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதன் தொல்லைகளும், குன்னூர் போன்ற நகர பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.
உணவு, குடிநீரைத் தேடி காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு கூடுதலாக குடிநீர்த் தொட்டிகளை வனத்துறையினர் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.