
நீலகிரி
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வளவாக மழை பொழிவு இல்லாத ஊட்டியில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யவில்லை. இந்த ஆண்டும் ஒரு சில நாள்கள் மட்டுமே மழை பெய்தது. பெரும்பாலான நாள்களில் வெயில் வாட்டி எடுத்தது. இதனால் ஊட்டி நகரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறிது நேரம் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பெரும் மழையாக உருவெடுத்து நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால், பல இடங்களில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தது.
இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி படகு இல்லம் அருகில் ஒரு பெரிய மரம் சாய்ந்தது. நேற்று அதிகாலை நேரத்தில் இந்த மரம், சாலையின் குறுக்கே விழுந்ததால் எந்த விபத்தும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்ததும் படகு இல்ல ஊழியர்கள் மின்சார வாள் கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
நீலகிரியில் பெய்த மழையின் அளவு:
குன்னூர் – 9.2 மி.மீ.
கூடலூர் – 3 மி.மீ.
குந்தா – 4 மி.மீ.
கேத்தி – 11 மி.மீ.
கோத்தகிரி – 8 மி.மீ.
நடுவட்டம் – 18 மி.மீ.
ஊட்டி – 17.3 மி.மீ.
கல்லட்டி – 12 மி.மீ.
கிளன்மார்க்கன் – 27 மி.மீ.
அப்பர்பவானி –1 மி.மீ.
எமரால்டு – 3 மி.மீ.
அவலாஞ்சி – 10 மி.மீ.
கெத்தை – 1மி.மீ.
கோடநாடு–42 மி.மீ.
தேவாலா– 2 மி.மீ.
பர்லியார்– 5 மி.மீ.