
நாமக்கல்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒற்றை ஆளாய் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் தங்க சண்முகசுந்தரம், மொட்டை அடித்தும், நாமம் போட்டும், கண், காது மற்றும் வாயில் ‘பிளாஸ்திரி’ ஒட்டிக் கொண்டும் போராட்டம் நடத்தினார்.
“காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,
தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
தென்னக நதிகளை இணைக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முப்பது நாள்களுக்கும் மேலாக இவர்களின் இந்தப் போராட்டம் தொடர்கிறது. தற்போது, மத்திய அரசிற்கு இரண்டு நாள் கெடு கொடுத்து தற்காலிகமாக அவர்களது போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு விவசாய அமைப்புகள், சமூக அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியில் கட்சியினர் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் தங்க சண்முகசுந்தரம், மொட்டை அடித்தும், நாமம் போட்டுக் கொண்டும், கண், காது மற்றும் வாயில் ‘பிளாஸ்திரி’ போட்டு ஒட்டிக் கொண்டும் போராட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே, இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தினேன்.
நாளை (ஏப்ரல் 21) முதல் விவசாயிகளை திரட்டி மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
ஒற்றை ஆளாய் விவசாய சங்க பிரதிநிதி நடத்திய இந்த போராட்டம் நேற்று பூங்கா சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ஆம் தேதி அரை நிர்வாண போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.