
திருச்சி
வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தாலே எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்று சீராக குடிநீர் வழங்காததைக் கண்டித்து வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மலைக்கோட்டை அருகேயுள்ள சறுக்குபாறை பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதனால், அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இதனால் சினம் கொண்ட மக்கள் சீராக குடிநீர் வழங்காததைக் கண்டித்து நேற்று காலை வெற்றுக் குடங்களுடன் சறுக்குபாறை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வெற்றுக் குடங்களை வரிசையாக கயிற்றில் கட்டி சாலையின் குறுக்கே தொங்கவிட்டு இருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல் உதவி ஆணையர் சீனிவாசபெருமாள், ஆய்வாளர் (பொறுப்பு) இராமலிங்கம் மற்றும் மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் நரசிங்கமூர்த்தி ஆகியோர் அங்குச் சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் மக்கள் கூறியது:
“முன்பெல்லாம் இந்தப் பகுதியில் தினமும் அதிகாலை முதல் 5 மணிநேரம் தண்ணீர் வந்தது. கடந்த சில மாதங்களாக சரிவர தண்ணீர் வரவில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் ½ மணிநேரம் மட்டுமே வருகிறது. இதனால் கடும் அவதி அடைந்து வருகிறோம்.
மேலும், இந்த பகுதியில் உள்ள ஒரு சில வணிக நிறுவனங்களில் அதிக அளவில் குடிநீரை பயன்படுத்துவதாலும், சிலர் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதாலும் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆகவே அவ்வாறு மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டும். மேலும் வணிக நிறுவனங்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்புகளை துண்டித்தாலே எங்களுக்கு அத்தியாசிய தேவைக்கான தண்ணீர் கிடைக்கும்” என்று கூறினர்.
இதற்கு பதிலளித்த இளநிலை பொறியாளர் நரசிங்கமூர்த்தி, “இந்த பகுதியில் உடனடியாக லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அப்போது அவர்கள், லாரி மூலம் தண்ணீர் தேவையில்லை. குழாயில் வினியோகிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தாசில்தார் சத்தியமூர்த்தி அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். வணிக நிறுவனங்களுக்கு செல்லும் குடிநீர் இணைப்பு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதனையேற்றுக் கொண்ட மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.