காவி என்பது தியாகத்தின் வண்ணம் என தூர்தர்ஷன் லோகோ சர்ச்சை குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்
மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நிறுவனத்தின் சேனல்கள் அண்மையில் புதுப்பொழிவு பெற்றன. அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான டிடி நியூஸ் சேனலின் லோகோ சிவப்பு வண்ணத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் இலச்சினையின் நீல நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பாஜக அரசின் காவிமயமாக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. தேர்தலில் வாக்குகளை கவரவும், அரசு நிறுவனங்களை கைப்பற்றவும் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்!
இந்த நிலையில், காவி என்பது தியாகத்தின் வண்ணம் என தூர்தர்ஷன் லோகோ நிறமாற்றம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காவி என்பது தியாகத்தின் வண்ணம். தேசியக் கொடியின் முதன்மை வாய்ந்த வண்ணம் காவி. காவி வண்ணத்தில் தொலைக்காட்சியின் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே. DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காவி நிற லோகோ சர்ச்சைக்கு மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி, தூர்தர்ஷன் லோகோவின் வண்ணத்தை பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்றும், அது காவி நிறமல்ல, ஆரஞ்சு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.