
தூத்துக்குடி
சமீப காலங்களில் ஏ.டி.எம் எண் கேட்டு மக்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து திருடுகின்றனர். எனவே, மக்கள் யாரும் செல்போனில் வங்கி ஏடிஎம் அட்டை எண், கிரெடிட் அட்டை எண் கேட்டு அழைப்பு வந்தால் தெரிவிக்க வேண்டாம் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபக் காலமாக ஏடிஎம் அட்டை மோசடி குற்றங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. மக்களின் செல்போன் எண்ணுக்கு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் போல் அழைப்பு விடுத்து ஏடிஎம் அட்டை காலாவதி ஆக உள்ளதாகவும், அதனை புதுப்பிக்க ஏடிஎம் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறுங்கள் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும் கூறி ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டை எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை லாவகமாகப் பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கும், தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பாமர மக்களுக்கு இது போன்ற மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க தமிழில் குறுஞ்செய்தி அனுப்பியும் மற்றும் மக்களிடையே காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காவல்துறை சார்பில் அந்தந்த உள்கோட்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலமும் வங்கி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மக்கள் இதுபோன்ற மோசடி செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளித்து ஏடிஎம், கிரெடிட் கார்டு எண் போன்ற விவரங்களை தெரிவிக்காமல், இரகசியமாக வைத்திருக்கவும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.