இரண்டாவது கணவரால் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட இரண்டாவது மனைவி; கள்ளத் தொடர்பால் கணவன் வெறிச்செயல்...

First Published Jan 19, 2018, 6:36 AM IST
Highlights
The second wife was killed by her second husband


திருவாரூர்

திருவாரூரில் இரண்டாவது மனைவி வேறோருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததை அறிந்த இரண்டாவது கணவன கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்ததில் இரத்த வெள்ளத்தில் மிதந்த மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேவுள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்  தொழிலாளி தர்மராஜ் (45). இவர் தனது முதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

இவருக்கும், பூவனூர் அருகே உள்ள பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்த சுமதி (35) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சுமதி ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுமதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் தர்மராஜ். இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் சுமதிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதை  அறிந்து தர்மராஜ் சுமதியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுமதி, தர்மராஜை பிரிந்து நீடாமங்கலம் கோரையாற்றாங்கரை தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை 6.30 மணியளவில் சுமதி நீடாமங்கலம் கடைவீதியில் அண்ணாசிலை அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜ், சுமதியிடம் கள்ளத் தொடர்பை கைவிட்டு தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தர்மராஜ் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை அறுத்தார். இதில் இரத்த வெள்ளத்தில் மிதந்த சுமதி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண்ணின் கழுத்தை ஒருவர் அறுத்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தர்மராஜை சுற்றி வளைத்து பிடித்து நீடாமங்கலம் அண்ணாசிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பியில் கட்டி வைத்துவிட்டு நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று கட்டி வைக்கப்பட்டிருந்த தர்மராஜிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், சுமதியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தர்மராஜை நீடாமங்கலம் காவலாளர்கள் கைது செய்தனர்.

click me!