அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை – ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு…

First Published Jun 2, 2017, 8:28 AM IST
Highlights
doesnt start the works for atthikadavu - avinasi scheme


ஈரோடு

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு சம்பத் நகரில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஈரோடு வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை பராமரிக்கவும், தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தியும் கொ.ம.தே.க சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வருகிற 6–ஆம் தேதி நடத்தப்படுகிறது.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இம்மாநாட்டில் பங்கேற்கிறார். அவரிடம் நீர்மேலாண்மைத் திட்டத்தை எடுத்துக்கூறி சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கை வைப்போம்.

பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கேரள மாநிலத்திற்கு செல்லும் பவானி ஆற்று தண்ணீர் நிறுத்தப்படும்.

இதேபோல நீலகிரி பகுதியில் உதயமாகும் பல்வேறு கிளை நதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்துக்கு திருப்பி விட்டால் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது.

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பாக ஆட்சி நடப்பதால் புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் எந்தவொரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை.

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாட்டுச்சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் யாரும் முன்வருவதில்லை. இது நாட்டு மாடுகள் வளர்க்கும் ஆர்வத்தை குறைக்கும் விதமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் 2 லிட்டர் முதல் 5 லிட்டர் வரையிலான பால் மட்டுமே உற்பத்தி செய்பவர்களாக உள்ளனர். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவு பால் விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.

சாராயக் கடைக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டம் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை தவிர வேறுவழியே இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை அவரை பற்றி பேசுவதே நேரம் வீண் என்று நினைக்கிறேன்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்ததை வரவேற்கிறேன்.

தமிழக அரசு முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய ஆசையே ஆளும் கட்சிக்கு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் சென்னியப்பன், மாநில துணைச் செயலாளர் தங்கவேலு, பொருளாளர் கே.கே.பாலு, தலைமை நிலையச் செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், இளைஞர் அணிச் செயலாளர் சூரியமூர்த்தி, விவசாயிகள் அணிச் செயலாளர் கோபால்சாமி, துணைச் செயலாளர் சந்திரசேகர், மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் சதாசிவம், கொள்கைப் பரப்புச் செயலாளர் அசோகன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

tags
click me!