அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை?

By Manikanda PrabuFirst Published Jun 14, 2023, 11:25 AM IST
Highlights

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சேம்பரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையின் முடிவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், இசிஜி-யில் மாறுபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்து கண்காணித்து வருகிறார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை சி.ஆர்.பி.எஃப் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. சென்னை மற்றும் கரூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி டெல்லி அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

“தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத் துறை நடவடிக்கை மனித உரிமை மீறல்.” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது..! தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின் எச்சரிக்கை

இதனிடையே, சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். ‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் பாஜக வின் அமலாக்கத்துறை அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.’ என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!