பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… டாக்டர் ரஜினிகாந்த் போக்சோவில் கைது!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 10:19 AM IST
Highlights

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் வடக்கு பிரதகட்சணம் சாலையில் ஜி.சி. எலும்பு மூட்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு மருத்துவராக பணியாற்றி வரும் ரஜினிகாந்த் என்பவர்,  அதே மருத்துவமனையில் காசாளராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காசாளராக பணிபுரிந்து வந்த பெண்னுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருந்துள்ளார். இதை அடுத்து வழக்கம் போல் பள்ளி முடிந்ததுடன் தாய், பணிபுரியும் மருத்துவமனைக்கு வரும் சிறுமி, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் தனது சம்பளப் பணத்தை வாங்க தனது மகளை மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைத்துள்ளார். அப்போது மருத்துவர்  ரஜினிகாந்த் பள்ளி மாணவியை  தனியாக அழைத்து சென்று,  பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அந்த மருத்துவரின் அறையில் இருந்து கூச்சலிட்ட படியே வெளியில் ஓடியதுடன், நடந்தவற்றை  தாயிடம் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுமியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், 17 வயது நிரம்பிய தனது மகள் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தான் வேலை பார்த்த மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கேசியராக பணியாற்றி வந்த 38 வயது பெண் மருத்துவமனை நிர்வாகத்தில் முன்பணம் வாங்கி உள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணிற்கு தீபாவளி போனஸ் மற்றும் சம்பளம் வழங்கவில்லையாம். இதனால் அந்த பெண் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதுகுறித்து அறிந்த மருத்துவமனையின்  டாக்டர் ரஜினிகாந்த், மருத்துவமனையின் மேலாளர் சரவணன் மூலம் அந்த பெண்ணின் மகளான 11 ஆம் வகுப்பு சிறுமிக்கு போன் செய்துள்ளார். அப்போது மேலாளர் உங்களது தாயின் சம்பளம் தொடர்பாக டாக்டர் உங்களிடம் நேரில் பேச வேண்டும் எனவும், அதனால் மருத்துமனைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளார்.

இதனை நம்பி அந்த சிறுமி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து டாக்டர் ரஜினிகாந்த் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சரவணனை பிடித்து விசாரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள டாக்டர் ரஜினிகாந்த்தை போலீசார் வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில் கரூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. கோவையில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ள நிலையில், கரூரில் டாக்டர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!