இனி ஆஃப்லைனில் மட்டுமே செமஸ்டர் தேர்வு… மாணவர்கள் போராட்டத்திற்கு ஃபுல்ஸ்டாப் வைத்த உயர்க்கல்விதுறை!!

By Narendran SFirst Published Nov 16, 2021, 5:51 PM IST
Highlights

தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது. அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கவிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேரடி தேர்வை ரத்து செய்யகோரி திடீரென இன்று இரண்டாம் நாளாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலை கழகம், அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி, மதுரைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த தேர்வை கல்லூரி நிர்வாகம் இரண்டு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தது. இதனையடுத்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆன்லைன் தேர்வை நடத்தகோரி பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் பரபரப்பான சூழல் உள்ளது. மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்குத் தள்ளிவைத்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. எனினும் நேரடித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.  இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பானது குறைய தொடங்கியிருப்பதால் முழுமையாக நேரடி தேர்வு முறை நடத்தப்படும் என்றும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் இதே முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. நேரடி தேர்வானது அரசு வெளியிட்டிருக்கக்கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை வெளியிட்டிருக்கக்கூடிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

click me!