சாலை விபத்துகளை தடுக்கனும்னா இவ்வளவும் பண்ணுங்க – ஐடியாக்களை அள்ளி வீசிய ஆட்சியர்…

First Published May 17, 2017, 6:53 AM IST
Highlights
Do you want to stop road accidents?


வேலூர்

வாரத்திற்கு இரண்டு, மூன்று விபத்துகளை கட்டாயம் பார்த்துவிடும் சித்தூர் சாலையில், விபத்துகளை தடுக்க அதிகாரிகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டம், சித்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் பிரதியும்ணா தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில், திருப்பதி புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகந்தி, மாவட்ட இணை ஆட்சியர் கிரீஷ், திருப்பதி மாநகராட்சி ஆணையர் ஹரிகிரண், மாவட்டப் போக்குவரத்துத்துறை ஆணையர் ஸ்ரீதர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது ஆட்சியர் பேசியது:

“சித்தூரில் மொத்தம் 600 கிமீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 1000 கிமீ தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.

மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அதில் ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன.

திருப்பதி – நாயுடுபேட்டை, சென்னை – பெங்களூரு, பலமநேர் – பூதலப்பட்டு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. இந்தத் தேசிய நெடுஞ்சாலைகளில் வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று விபத்துகள் நடக்கின்றன.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்துத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்துகள் நடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். சாலைகளின் வளைவுகளில் எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.

விபத்து நடக்கும் பகுதியில் சாலையை சற்று விரிவாக்கம் செய்யலாம்.

விபத்துகளை தடுக்க சாலை ஓரமும், சாலையை ஒட்டி உள்ள மரங்களின் மீதும் ஒளியை பிரதிபலிக்கும் விளக்குகளை பொருத்த வேண்டும்.

சித்தூர் – நாயுடுபேட்டை வரை ஆறு வழி சாலையாக அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சித்தூர் – பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி விட வேண்டும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் புதர் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்” என்று ஆட்சியர் பேசினார்.

click me!