ஜல்லிக்கட்டு நடக்கனுமா? அப்போ மாவட்டத்திற்கு 1 இலட்சம் பேர் கையெழுத்து போடுங்க…

First Published Nov 28, 2016, 8:56 AM IST
Highlights


ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாவட்டத்திற்கு ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி மத்திய அரசிற்கு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இந்த குளிர்கால கூட்டத் தொடரிலாவது பாராளுமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தனி சட்டம் இயற்றும் வகையில் மசோதா நிறைவேற்றிட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருவதோடு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்டு அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல மணப்பாறையிலும் 1 இலட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்காக பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுலமாதா ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

இதையடுத்து நாட்டாண்மை சார்லஸ் முதல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஒரு விண்ணப்பத்தில் 10 பேர் வீதம் முதல் கட்டமாக 1000 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடர்ந்து கையெழுத்து பெறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராபின் செய்தார்.

tags
click me!